Monday, October 19, 2015

இராவணணின் வீழ்ச்சிஇராவணன், இராவணீயம் என்றெல்லாம் பெரிய பேச்சுக்கள் பேசுகிறார்கள் தமிழ் ஆய்ந்து அறிந்தவர்கள். கம்பனும் வால்மீகியும் ஏதோ இராவணனை "லக லக லக எனும் நாக்கு சுருட்டும் வேட்டையனாக காட்டிவது போல், இராவணணுக்கு வரிந்து கட்டு வக்காளத்து வாங்கி தங்கள் பகுத்தறிவினை காட்டிக் கொள்கிறார்கள்.
ஆனால் இராமாயணத்தில் இராவணனை அப்படியா காட்டி உள்ளனர்?
"முக்கோடி வாழ்நாளும், முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்நாள்

எக்கோடி யாராலும் வெலப்படாய்

எனக்கொடுத்த வரமும், ஏனைத் திக்கோடும் உலகு அனைத்தும்

செருக்கடந்த புயவலியும்
உடைய இராவணன்,
வரையினை எடுத்த தோளன்,
நாரத முனிவர்க்கேற்ப நயம் பட உரைத்த நாவினன்
சங்கரன் கொடுத்த வாள் உடையவன்
ஈஸ்வரனுக்கு இணையாக இராவணேஸ்வரண் என்று பெயரெடுத்தவன்
அவன் எப்படி பட்ட நகரை ஆண்டான், செல்வமும், கல்வியும் சிறந்து விளங்கிய நகரை ஆண்டவன்,
ஆழ்வாரே பாடுகிறான்
பொன்னாற் மதில் சூழ் இலங்கைக்கு இறைவன் என்று
இப்படி பட்ட இராவணன் ஏன் தோற்றான்?
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று கூறிய திராவிடத் தலைவன் வழித் தோன்றல்கள் கூறுவது போல் வர்க்கப் போராட்டமா?
இல்லை மாற்றான் தோட்டாத்து மல்லிகைக்கு மட்டுமே மணமுண்டு என்று எண்ணியதால்தான்!! மாற்றான் தோட்டத்து மல்லிகையை முகர்ந்து கசக்கிட எண்ணி அறவழி தவறியதால் அன்றி வேறில்லை.
இராவணணிடம் தவங்கள் பல உண்டு, புண்ணியங்கள் கோடி உண்டு, ஆயினும் ஒரு குடம் பால் என்றாலும் , ஒரு துளி விஷம் சேர்ந்து விட்டால் பாலை கொட்டத்தானே வேண்டும்? இதனை நான் சொல்லவில்லை, 
இந்த திராவிடத் தமிழர்களால் பெண்ணியப் அடையாளமாகப் பார்க்கப்ப்டும் மண்டோதரி வாயிலாக சொல்கிறான் கம்பன்
"திரை கடியிட்டு அனப்ப அரிய வரம் என்னும்

பாற்கடலைச் சீதை என்னும்

பிரைகடையிட்டு அழித்தது" என்று
அறத்தை துறந்ததால் தான் இராவணன் வீழ்ந்தான், அதுவும் எந்த அறம் தெரியுமா? தமிழர்களால் தன் குல பெரியோன் என் கொண்டாடப்படும் வள்ளுவ பேராசான் கூறும் பிறன் மனை நோக்கா பேறாண்மை வேண்டும் என்ற அறம் துறந்ததால் அன்றி வேறில்லை.
மற்றொன்ன்று மண்டோதரிக்கு ஏதோ உரிய இடம் தரப்படவில்லை என்ற புலம்பல்
மண்டோதரியை எப்படி காட்டுகிறார்கள் தெரியுமா? சுந்தர காண்டத்தில் சீதையை தேடிவரும் அனுமன் மண்டோதரியை கண்டு இவண் சீதையாக இருப்பாளோ எண்ணுவதாகக் காட்டியுள்ளான். சீதைக்கு இணை என்று காட்டுவதை போன்ற சிறப்பினை தவிர வேறு சொல்லவும் வேண்டுமோ?
தன்னை பகுத்தறிவு பகலவன் வழித் தோன்றல்கள் என்று காட்ட விரும்பி வைக்கப்ப்டும் விமர்சங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வட்டத்தினர் மீதுள்ள வெறுப்பை காட்டுமே ஒழிய, தாங்கள் கற்ற தமிழை காட்டாது.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
என்ற வள்ளுவ பேராசானின் வார்த்தைகளை நினைவூட்டி, பகுத்தறிவு என்பது வெறுப்பிலோ உணர்ச்சிப் பிழம்பிலோ விளைவது அல்ல,
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?
என்ற பாரதியின் வார்த்தையே பகுத்தறிவு. நாம் பகுத்தறிவாளர்களாய் இருபோம் என நம்புகிறேன்.

No comments:

Post a Comment